தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியில் கிளியர் திட்டம்: திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆலோசனைக் கூட்டம்

சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்தும் மாநகராட்சி மற்றும் எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் கிளியர் (CLEAR) திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (07.10.2026) நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மண்டல துணை ஆணையர்கள் (வடக்கு, மத்திய மற்றும் தெற்கு), தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை), மேற்பார்வைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை), மாநகர சுகாதார அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் (MSSRF) சார்பில், அதன் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன், முதன்மை விஞ்ஞானி டாக்டர் பிரதிபா கணேசன், மூத்த அறிஞர் டாக்டர் ஜெயந்தி முரளி மற்றும் கிளியர் திட்டக் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் 'கிளியர்' (CLEAR - Clean Land, Equitable Air and Resilience) திட்டத்தின் கீழ் சென்னையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான முன்னுரிமைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் (MSSRF) தலைமையில், இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras), ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (SRIHER) மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய அமைப்புகளின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படும் 'கிளியர்' திட்டம், திடக்கழிவு மேலாண்மை, காற்று மாசுபாடு, காலநிலை தொடர்பான அபாயங்கள் மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகளை ஆராயும். மேலும், இது மாநகராட்சி நிறுவனங்களுடன் இணைந்து அமைப்புகளை வலுப்படுத்தவும், சான்றுகள் அடிப்படையிலான தலையீடுகளை உருவாக்கவும் செயல்படும்.

இந்த ஆலோசனைக் கூட்டம், திடக்கழிவு மேலாண்மை, காற்றின் தரம் மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றில் சென்னை மாநகராட்சியின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் நடப்புத் திட்டங்களுடன் கிளியர் திட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

விவாதங்கள் பின்வரும் அம்சங்களில் கவனம் செலுத்தின :

  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான மாநகராட்சியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் முன்னுரிமைகள்;

  • வெவ்வேறு மண்டலங்களில் செயலாக்கத்தில் உள்ள தடைகள் மற்றும் அமைப்பு ரீதியான சவால்கள்;

  • மாநகராட்சியால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கழிவுத் தணிக்கைகள், களப்பார்வைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளில் இருந்து பெறப்பட்ட பாடங்கள்;

  • ‘கிளியர்' திட்டத்தின் கீழ் முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய வார்டுகள் மற்றும் மண்டலங்கள்;

புதிய திட்டம்

தூய்மைப் பணியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் தேவைகள்; மற்றும் காற்று மாசுபாடு, வெப்பம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்புகொண்ட சவால்களை எதிர்கொள்வதற்கான எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் (MSSRF)-ன் புதிய திட்டம்.

சுற்றுச்சூழல் அபாயங்களை வெறும் உள்கட்டமைப்பு மற்றும் சேவை விநியோகப் பிரச்சினைகளாக மட்டும் பார்க்காமல், சமூகங்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுடனும் தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த விவாதங்கள் சுட்டிக்காட்டின. நடைமுறைத் தீர்வுகளை உருவாக்க அறிவியல் சான்றுகள், உள்ளூர் அறிவு மற்றும் நகராட்சியின் அனுபவம் ஆகியவற்றை ஒன்றிணைக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறியவும் இக்கூட்டம் வழிவகுத்தது.

தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சென்னையை உருவாக்க, அறிவியல் ஆராய்ச்சிகளை கள அளவிலான செயல்பாடுகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. சமீரன் வலியுறுத்தினார். முன்னோடித் திட்டங்களுக்கான முன்னுரிமை வார்டுகள் மற்றும் மண்டலங்கள் குறித்து மாநகராட்சி தலைமை வழிகாட்டுதல் வழங்கியதோடு, நகராட்சியின் தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்த மேலதிக திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவி தேவைப்படும் பகுதிகளையும் அடையாளப்படுத்தியது.

மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்

இதனைத் தொடர்ந்து, ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு (ICCC) இக்கூட்டத்தின் பங்கேற்றவர்கள் பார்வையிட்டனர். அதில், மாநகரம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகள் மற்றும் காற்றின் தரத் தகவல்களை மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் அமைப்புகள் மூலம் எவ்வாறு கண்காணித்து ஒருங்கிணைக்கிறார்கள் என்பதை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கிக் காட்டினர்.

'கிளியர்' திட்டத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை ஒருங்கிணைந்த கோணத்தில் அணுகுவதாகும். இது திடக்கழிவு மேலாண்மை அமைப்பின் நிலைகளை, திடக்கழிவுப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் எதிர்கொள்ளும் சுகாதார அபாயங்களுடன் இணைக்கிறது. கழிவு மேலாண்மை நடைமுறைகள், காற்று மாசுபாடு மற்றும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் சுகாதாரத்துடன் எவ்வாறு குறுக்கிடுகின்றன என்பதை இத்திட்டம் ஆராயும். அதே வேளையில் காலநிலை தொடர்பான அபாயங்களின் பரந்த தாக்கங்களையும் கருத்தில் கொள்ளும். சுற்றுச்சூழல் கண்காணிப்பு, சுகாதாரச் சான்றுகள் மற்றும் மாநகராட்சி அமைப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம், சேவை விநியோகத்தையும் சுற்றுச்சூழல் அபாயங்களுக்கு அதிகம் ஆளாகுபவர்களின் பாதுகாப்பையும் வலுப்படுத்தக்கூடியதாக ‘கிளியர்' திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

'கிளியர்' திட்டம்

சென்னை மாநகராட்சிக்கும் ‘கிளியர்' திட்டத்திற்கும் இடையே ஒரு கூட்டுச் சான்று-செயல்பாட்டுக் கட்டமைப்பை (evidence-to-action framework) உருவாக்குவதில் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமானதாகும். மேலும், அடிப்படை மற்றும் பாதிப்பு மதிப்பீடுகள், சான்றுகள் அடிப்படையிலான செயல் திட்டமிடல், திறன் மேம்பாடு மற்றும் தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு (IEC) நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மாநகராட்சித் துறைகள் மற்றும் களக் குழுக்களுடன் இத்திட்டம் நெருக்கமாகச் செயல்படும்.

இந்தக் கூட்டாண்மையின் மூலம், சென்னையில் நிலையான, காலநிலைக்கு ஏற்ற மற்றும் சுகாதாரத்திற்குப் பதிலளிக்கக்கூடிய திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளுக்குப் பங்களிப்பதை 'கிளியர்' திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில் மாநகராட்சி நடவடிக்கைகள் மற்றும் பரந்த மாநகர சுற்றுச்சூழல் சுகாதார நடைமுறைகளுக்கு வழிகாட்டக்கூடிய சான்றுகளையும் இது உருவாக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT