தமிழக செய்திகள்

ஆலந்தூரில் ரூ.22.10 கோடியில் புதிய கல்லூரி கட்டடம்: முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

சென்னை,

உயர்கல்வித்துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் விஜய் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் 52 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்

கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 மாணவர்கள் தங்கும் வகையில் ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 8 கூடுதல் வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், கான்கிரீட் சாலை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி மேம்பாடு, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள்விளையாட்டரங்கம் மற்றும் சுற்றுச்சுவர் என மொத்தம் 52 கோடியே 1 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட பணியின் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் சாய்குமார், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பொ. ரத்தினசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT