சென்னை,
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியதாவது:
கடல் நீர் உட்புகுதல், கடல் அரிப்பு மற்றும் வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட வேண்டுமென்றும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரக் கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மேலும், மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதையும், வெள்ளப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டிற்குத் தயாராக இருப்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும், நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், அவசரகால மீட்புப் பணிகளின்போது, மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் பிற எச்சரிக்கை வழிமுறைகள் மூலம் தகவல் வழங்கப்படுவதையும், செயற்கைக்கோள் தொலைபேசி (Satellite phone) உள்ளிட்ட அவசரகால தகவல் தொடர்பு சாதனங்கள் செயல்படும் நிலையில் தயாராக உள்ளதா என்பதையும் உறுதிசெய்திட வேண்டுமென்றும், சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டுமென்றும் தெரிவித்தார். மேலும், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, எல்-நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு – பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட ஆய்வறிக்கையினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கினார்.
டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டவாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, நோய் அதிகரித்துவரும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் முதலியவற்றைக் கண்டறிந்து கொசுப்புழு மற்றும் முதிர் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மருந்து அடிக்கும் உபகரணங்களின் இருப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர், கொசுப்புழு ஒழிப்புப் (DBC) பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, Aedes கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களிடையே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைப் பெறவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதோடு, தேவையான ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், திரவ சிகிச்சை வசதிகள், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும், இப்பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையோடு தொடர்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு உற்பத்தியாகும் இடங்களை அகற்றுதல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.