தமிழக செய்திகள்

காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை மாவட்டம், துறைமுகத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்

சென்னை,

காவல், தீயணைப்பு துறைகளுக்கு ரூ.164.64 கோடியில் புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் 121 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 400 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள்.

சென்னை மாவட்டம், துறைமுகத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;

சென்னை மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 5-ஆம் அணி வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி, என மொத்தம் 127 கோடியே 76 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டடங்களின் விவரங்கள்

சேலம் மாவட்டம் - செவ்வாய்பேட்டையில் 6 கோடியே 8 லட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - சமயபுரத்தில் 3 கோடியே 91 லட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் - வெப்படையில் 2 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவிலும், பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூரில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், மதுரை மாவட்டம் - தே. கல்லுப்பட்டியில் 2 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் வாடிப்பட்டியில் 2 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கை மாவட்டம் - சிங்கம்புணரியில் 2 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் - பீளமேட்டில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 15 குடியிருப்புகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் - திருச்செங்கோட்டில் 4 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 14 குடியிருப்புகள்.

கோயம்புத்தூர் மாவட்டம் - மேட்டுப்பாளையத்தில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான படைக் குடியிருப்பு, என மொத்தம் 36 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் வெங்கடராமன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.