தமிழக செய்திகள்

கோவை: செஞ்சேரிமலை குன்றுகளில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால பாறை ஓவியம், கற்கருவிகள் கண்டுபிடிப்பு

தொல்லியல் துறையும். சுற்றுலாத்துறையும் வரலாற்று சின்னங்களை பாதுகாத்து வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்து கூற வேண்டும்.

கோவை,

கோவையை அடுத்த வெள்ளலூரில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. வெள்ளலூரை அகழ்வாராய்ச்சி பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுக்கரையில் உள்ள பாறை ஓவியம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தநிலையில் கோவை செஞ்சேரிமலை அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்த மாணவி உமாமகேஸ்வரி, சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவர், செஞ்சேரிமலை கிராமத்தின் சின்னமலை பகுதியில் பாறை ஓவியங்கள், கற்கால கருவிகளை கண்டறிந்தார். அதை சென்னை பல்கலைக்கழகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பாறை ஓவியங்கள்

சின்னமலை மற்றும் செஞ்சேரிமலை குன்றுகளில் பழங்கால நுண்கற்கருவிகள், அடர் சிவப்பு நிற மண் சாயத்தால் செய்யப்பட்ட பாறை ஓவியம் கண்டறியப்பட்டு உள்ளன. இவை கோவை பகுதியின் கலாசார வரலாற்றை வெளிப்படுத்தி உள்ளது.வடிவியல் பகுப்பாய்வின் மூலம், கண்டறியப்பட்ட கற்கால கருவிகளின் தொகுப்பில் கட்டைவிரல் நகம் போன்ற வடிவத்திலான கற்கால கருவிகள், துளையிடும் கருவி உள்ளது. இது இந்திய நுண்கற்கருவி மரபின் சிறப்பு என்று சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி பொறுப்பாளர் டாக்டர் ஜினு கோஷி கூறினார். மேலும் இந்த பாறை ஓவியம். கற்கருவிகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால மனிதர்கள் பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது.

பாதுகாக்க கோரிக்கை

செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் கி.பி. 1339-ஐ சேர்ந்த ஹொய்சாலா மன்னர் காலத்து கல்வெட்டு ஒன்று உள்ளது. சின்னமலையில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவில், நாயக்கர் காலத்தை சேர்ந்தது. பெருமாள் கோவில் சுவர்களுக்கு பின்னாலேயே உள்ள பாறைக்குகை, அந்த மலையின் மிகப்பழமையான நினைவை அமைதியாக தன்னகத்தே கொண்டுள்ளது.

கற்கால மனித குழுக்கள், பாலக்காட்டு கணவாய் வழியாக கால்நடைகளை ஓட்டிச்செல்லும் போது, தங்கள் பயணத்தை தொடர்வதற்காக இந்த குன்றுகளை தற்காலிக அல்லது பருவ கால தங்குமிடங்களாக பயன்படுத்தினர் என்று கூறலாம். மேலும் இந்த மலைப்பகுதியில் கிடைக்கும் கற்களை ஆயுத கருவிகளாகவும் பயன்படுத்தி உள்ளனர்.

தொல்லியல் ஆராய்ச்சி மாணவி உமாமகேஸ்வரி கூறும்போது, வரலாற்று சிறப்பு மிக்க பாறை ஓவியம் பாதுகாக்கப்படாமல் உள்ளது. அங்கு செல்பவர்கள் சில அடையாள சின்னங்களை வரைகிறார்கள். இதனால் சிதிலம் அடைய வாய்ப்புள்ளது. எனவே தொல்லியல் துறையும். சுற்றுலாத்துறையும் வரலாற்று சின்னங்களை பாதுகாத்து வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்து கூற வேண்டும் என்றார். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியம், கற்கால கருவிகள் கோவைக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.