சிறுவன் தமிழ் 
தமிழக செய்திகள்

கோவை: 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரவீன்குமார் – ஹரிபிரியா. இந்த தம்பதியரின் 4 வயது மகன் தமிழ். சிறுவன் தமிழிற்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர் அவனை பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி சிறுவன் தமிழ் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் கோரிக்கை

4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் குங்குமம்பாளையம் மற்றும் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT