கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நள்ளிரவில் வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு 4 வயது ஆண் குட்டியானை உள்பட 4 காட்டுயானைகள் வந்தன.
அதிகாலை 3 மணியளவில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் மேடு, பள்ளமான இடத்தில் மூடியில்லாத 12 அடி ஆழ தரைமட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க சென்றன. அப்போது தொட்டியில் இருந்த தண்ணீரை தாய் யானை உள்பட 3 யானைகள் துதிக்கையை உள்ளே விட்டு குடித்தன.
இதேபோல் குட்டி யானையும் துதிக்கையை உள்ளேவிட்டு தண்ணீர் குடிக்க முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக கால்தவறி குட்டியானை தொட்டிக்குள் விழுந்தது. இதில் குட்டியானை தண்ணீரில் தத்தளித்து மேலே வரமுடியாமல் தவித்தது. குட்டியானையை மீட்க தாய் யானை மற்ற யானைகளுடன் முயற்சித்தன. மேலும் யானைகள் பிளிறிக் கொண்டே இருந்தன.
இந்த சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து சில தொழிலாளர்கள் விழித்து வந்து பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் குட்டியானை விழுந்து கிடப்பதையும், தாய் உள்ளிட்ட மற்ற யானைகள் அதை காப்பாற்ற முயன்று பிளிறியதும் தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த எஸ்டேட் நிர்வாகத்தினர் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத் துறை ஊழியர்கள் வந்து குட்டியானையை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது தாய் யானை மற்றொரு யானையுடன் சேர்ந்து வனத்துறையினரை துரத்தியது. இதையடுத்து மாற்று வழியாக பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர். பின்னர் குட்டி யானை வெளியே வரும் வகையில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு குடிநீர்தொட்டியின் ஒரு பக்கவாட்டு சுவரை உடைத்தனர். இந்த சமயத்தில் தன் குட்டிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதிய தாய் யானை பொக்லைன் எந்திரத்தை தாக்கி பாசப்போராட்டம் நடத்தியது. அதேநேரத்தில் வனத்துறையினரை துரத்தி தாக்க முயன்றது.
ஆனாலும் பொக்லைன் எந்திரத்தால் குடிநீர் தொட்டியின் ஒருபக்க சுவர் இடிக்கப்பட்டது. இப்படி சுமார் 10 மணி நேரம் வனத்துறையினர் போராட்டத்திற்கு பிறகு மதியம் 1 மணியளவில் குடிநீர் தொட்டியின் உடைக்கப் பட்ட பகுதி வழியாக குட்டியானை மெதுவாக வெளியே வந்து நின்றது. குட்டியானை வெளியே வந்ததும் அதனை தாய்யானை மகிழ்ச்சியுடன் அரவணைத்தது. மேலும் தொட்டியில் இருந்து தண்ணீரை எடுத்து குட்டியின் உடலில் பீய்ச்சியடித்து வனப்பகுதிக்குள் அழைத்து சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.