ஒற்றைக் காட்டு யானை 
தமிழக செய்திகள்

கோவை: தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை- பொதுமக்கள் பீதி

சிறிது நேரம் வீட்டின் வளாகத்தில் சுற்றித் திரிந்த யானை, பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றது.

கோவை,

கோவை மாவட்டம் தாளியூர் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி வந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய் குரைத்தும் அசராத யானை

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தாளியூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டின் முன்பு வந்துள்ளது. யானையைப் பார்த்த வீட்டின் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்து எச்சரித்தது. ஆனால், அதை சற்றும் பொருட்படுத்தாத யானை, வீட்டின் கதவு மற்றும் வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து உணவைத் தேடியது.

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் யானை புகுந்ததைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பாக உள்ளே முடங்கினர். சிறிது நேரம் வீட்டின் வளாகத்தில் சுற்றித் திரிந்த யானை, பின்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த முழு சம்பவமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

வனத்துறைக்கு கோரிக்கை

தொடர்ந்து குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஒற்றைக் காட்டு யானை நுழைந்து வருவதால், தாளியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு, வனத்துறையினர் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT