தமிழக செய்திகள்

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு

மயக்கம் அடைந்த முகேஷ்குமாரை டோலி கட்டி தூக்கி மலையில் இருந்து வனத்துறையினர் கீழே கொண்டு வந்தனர்.

கோவை,

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி உள்ள 7-வது மலையில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த மலை மீது செல்ல தற்போது அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பீடம்னேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முகேஷ்குமார் (23). இவர் கோவை பேரூர் அடுத்த தெலுங்குபாளையத்தில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் கல்லூரியில் டி.பார்ம் 5-ம் ஆண்டு படித்து வந்தார். முகேஷ்குமார் தனது நண்பர்களுடன் பூண்டி வெள்ளியங்கிரி மலையேறி சென்று சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக நேற்றிரவு முகேஷ்குமார் தனது நண்பர்களான அபி, மகேந்திரன் மற்றும் நண்பர்கள் 8 பேருடன் தெலுங்குபாளையத்தில் இருந்து புறப்பட்டு பூண்டி வெள்ளியங்கிரிக்கு சென்றனர். பின்னர் முகேஷ்குமார் தனது நண்பர்களுடன், பூண்டி அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, மலையேறினார்.

இன்று அதிகாலை முகேஷ்குமார் மற்றும் நண்பர்கள் 5-வது மலையில் ஏறி கொண்டிருந்தனர். அப்போது முகேஷ்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அப்படியே மயங்கி சரிந்து கீழே விழுந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியான நண்பர்கள் விரைந்து கீழே சென்று வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று, மயக்கம் அடைந்த முகேஷ்குமாரை டோலி கட்டி தூக்கி மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் முகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உடல் தகுதியை உறுதி செய்த பின்னரே மலை ஏற வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வெள்ளியங்கிரி மலையேறிய கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.