கோவை,
உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது.
தமிழக அளவில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையில் கோவை முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 251 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 307 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 210 பேர் தவிர்த்து மீதம் உள்ள மாணவ-மாணவிகள் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் 944 பேரில் அடுத்த கட்ட படிப்பிற்காக 288 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 656 பேர் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.
மாநில அளவில் முதலிடம்
அதன்படி கோவையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளில் 87 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து உள்ளனர். அத்துடன் மாநில அளவில் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவை முதலிடம் பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு 95.45 சதவீத மாணவ-மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உயர்கல்வியில் சேராத மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களை உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.