கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 22ஆம் தேதி 10 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அப்போது, காவல் துறையிடம் இருந்து தப்ப முயன்ற கார்த்தி, தவறி விழுந்ததில் வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்ததை அடுத்து கோவை மத்திய சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தினர். தட்டு, ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தாக்கியதில் கார்த்தி காயம் அடைந்தார். சக கைதிகளிடம் இருந்து கார்த்தியை மீட்ட காவல் துறையினர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதித்தனர். இதற்கிடையே, கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போக்சோ நீதிமன்றத்தில் கோவை போலீசார் மனு தாக்கல் செய்தனர். 5 நாள் காவலில் எடுக்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில், 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.