தமிழக செய்திகள்

கோவை: கல்லூரி மாணவர்கள் அறைகளில் போலீசார் அதிரடி சோதனை; போதைப்பொருள், ஆயுதங்கள் பறிமுதல்

400 போலீசார் 50 குழுக்களாக பிரிந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை,

போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் 400 போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

போதைப்பொருள் இல்லாத கோவை

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விற்பனையை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவை என்ற இலக்கை உருவாக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியாக அறைகள்

இந்த நிலையில் கோவில்பாளையம், சூலூர், செட்டிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 30 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளுக்கு வெளியே தனியாக அறைகள் மற்றும் வீடுகளில் தங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அதிகாலை 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 400 போலீசார் 50 குழுக்களாக பிரிந்து கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் அறைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனை

அப்போது மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் உள்ள அனைத்து அறைகள், பைகள், சூட்கேஸ்கள் என அனைத்தையும் போலீசார் சோதனை செய்தனர். அத்துடன் சந்தேகத்துக்குரிய மாணவர்களின் செல்போன்களும் சோதனை செய்யப்பட்டன.

கத்தி, அரிவாள்

சோதனையின்போது மாணவர்களுடன் தங்கி இருந்த 2 பேரிடம் போதை பொருட்களும், ஒருவரின் பையில் கத்தி, அரிவாள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், தச்சுத் தொழிலாளி என்பதால், வேலைக்கு கொண்டு செல்ல பையில் அரிவாள் மற்றும் கத்தி வைத்து இருப்பது தெரியவந்தது.

அத்துடன் மாணவர்கள் தங்கி இருந்த அறைகளில் இருந்து சந்தேகப்படும்படி நிறுத்தப்பட்டு இருந்த 14 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.