கோவை தொடர் குண்டுவெடிப்பு  
தமிழக செய்திகள்

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு: 5 குற்றவாளிகளுக்கு 60 நாட்கள் பரோல்

பரோலில் வெளியே வந்தவுடன் இந்த 5 பேரும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்து பேசியுள்ளனர்.

கோவை,

கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பங்கேற்க இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தைக் குறிவைத்து, நகரின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறின. தமிழக வரலாற்றையே உலுக்கிய இந்த கோரத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 58 பேர் உயிரிழந்தனர்; மேலும் பலர் படுகாயமடைந்து உடலுறுப்புகளை இழந்தனர்.

5 குற்றவாளிகளுக்கு பரோல்

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, தடைசெய்யப்பட்ட ‘அல் உம்மா’ அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணையின் முடிவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை மத்திய சிறையில் 22 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் முகமது அன்சாரி (58), முகமதுஅலி (52), மொனப்பாஎன்றமுக மது ஹசன் (46), முகமது அஜாம் மற்றும் நவாப்கான் ஆகிய 5 பேருக்கு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு 60 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.

எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

பரோல் வழங்கப்பட்டவர்களில் சிலர், குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியச் சூத்திரதாரியான எஸ்.ஏ.பாஷாவின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பரோலில் வெளியே வந்தவுடன் இந்த 5 பேரும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்து பேசியுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கேள்வி

58 பேரின் உயிரைப் பறித்த கொடூரர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பரோல் வழங்குவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT