கோவை,
சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததால் விரக்தி அடைந்த பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு ஏ.டி.காலனியை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மகன் அகிலன் (வயது 16). இவர் பீளமேடு கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அவரை பள்ளிக்கூடத்தில் வைத்து சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அகிலன் வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மாணவர் அகிலனின் சாவுக்கு காரணமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பீளமேடு போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள், மாணவரின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் அருண்குமார் (43), அகிலனின் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் (42) மற்றும் 2 மாணவர்கள் என 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) ரம்யா பாரதிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய தாயார் கொடுத்த புகாரின்பேரில் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் 2 மாணவர்கள் உள்பட 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சார்பில் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோவையில் பிளஸ் 1 மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.