கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக மருந்து தெளித்தபோது, இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் பகுதியில் கொசுக்களை ஒழிப்பதற்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அப்போது வீட்டுக்குள் மருந்து பரவிய நிலையில், வீட்டில் இருந்த மோகன் (65), ராணி (75) ஆகியோருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தில் ‘Pyrephrum’ என்ற பூச்சிக்கொல்லி அதிகளவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே வீட்டுக்குள் இருந்த இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொசு ஒழிப்பு பணியில் பயன்படுத்தப்பட்ட மருந்தின் தன்மை, அதன் அளவு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.