கோவை,
கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கிராமத்தில் வறட்சி நிலவியது. மழை பெய்வதற்காக கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, பெண் கழுதைக்கு புடவை, வளையல் மற்றும் மாலை அணிவித்தனர். ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்தனர். இதனை தொடர்ந்து லக்கிபாளையத்தில் உள்ள சுப்பிரமணிய கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு மேலத்தாளங்களுடன் பெண் கழுதைக்கு தாலி அணிவித்து திருமணம் செய்து வைத்தனர். பின்னர் திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கம்பங்கூழ் வழங்கப்பட்டது. இந்த திருமணத்தை தொடர்ந்து மழைப்பெய்யும் என்ற நம்பிக்கையில் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் என்றும் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற திருமணம் நடத்தியதால் மழை பெய்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.