கோவை,
கோவையின் மைய பகுதியான காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சிறைத்துறைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்பட்டு உள்ளது.
நூலகங்களுக்கு எல்லாம் முன்மாதிரி நூலகமாக பெரியார் அறிவுலகம் உள்ளது. இது, புத்தக வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நூலகத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின் நூல்கள். கணினி வசதிகள் மற்றும் அறிவியலை நேரடியாகக் கற்று உணரக்கூடிய அறிவியல் மையம், கோளரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் மொத்தம் 7 தளங்கள் உள்ளன. அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு:-
தரைத்தளம்: இங்கு மாற்றுத்திறனாளிகள் நூலகம், அவர்களுக்கு உரிய பிரைலி புத்தகங்கள் இடம் பெற்று உள்ளன. இதில் 300 முதல் 400 பேர் வரை அமர்ந்து படிக்கலாம். இவை தவிர நவீன ஆடிட்டோரியம், ஆசியாவில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ் லிப்ட் வசதி, அறிவியல் மையம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
முதல்தளம்: வரவேற்பறை, அறிவியல் மையம் உள்ளது.
2-வது தளம்: குழந்தைகள் நூலகம் அமைந்துள்ளது. அதோடு சுய வாசிப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
3-வது தளம்: போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான நூல்கள் இடம்பெறுகிறது. தலைமை நூலகர் அலுவலகமும் அமைந்துள்ளது.
4-வது தளம்: இங்கு வரலாற்று புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழ் நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவுகளும் செயல்பட உள்ளன.
5 மற்றும் 6-வது தளம்: ஆங்கில நூலகம் செயல்பட உள்ளது. இது தவிர ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு என இன்குபேஷன் சென்டர் மற்றும் ஆங்கிலம் கற்கும் பிரிவும் உள்ளது.
7- வது தளம்: அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் மற்றும் விண்வெளி கோளரங்கம் ஆகியவை செயல்பட உள்ளது. இதில் விண்வெளியில் உள்ளவற்றை மிகவும் தெளிவாக பார்த்து ரசிக்க முடியும். இந்த பெரியார் நூலகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் இடம் பிடித்துள்ளன. ஏற்கனவே இந்த பகுதியில் செம்மொழி பூங்கா உள்ளது. தற்போது அதன் அருகிலேயே பிரமிக்க வைக்கும் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் திறக்கப்படுவது பொதுமக்களுக்கும். கல்வியாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.