நெல்லை,
நெல்லை பேட்டை பகுதியை சேர்ந்த 34 வயது வாலிபர் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் கடன் பெற முயன்றுள்ளார். அப்போது அந்த செயலியில் கேட்ட புகைப்படம் உள்பட முக்கிய தகவல்களை கொடுத்துள்ளார். பின்னர் அந்த செயலி மூலம் சுமார் ரூ.30 ஆயிரம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த கடன் தொகையை சில நாட்களில் அந்த பேராசிரியர் திரும்ப செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் வாட்ஸ்-அப் மூலம் அந்த பேராசிரியரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கூடுதல் பணத்தை செலுத்த கூறி மிரட்டியுள்ளனர். இதனால் அவர் ரூ.30 ஆயிரம் கடனுக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரையிலும் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார். எனினும் அந்த கும்பல் கூடுதல் பணத்தை கேட்டு ஆபாசமாக சித்தரித்த படத்தை அவரின் மனைவிக்கு அனுப்பி மிரட்டியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த பேராசிரியர் நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.