தமிழக செய்திகள்

சுற்றுலா வந்த இடத்தில் 400 அடி பள்ளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை: என்ன காரணம் போலீசார் விசாரணை

காலை 6 மணியளவில் கொழுக்குமலையில் சிங்கப்பாறை என்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தி சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

தேனி,

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். விடுமுறைக்கு அவர் தனது நண்பர்களுடன் தேனி மாவட்டம், குரங்கணி மலை உச்சியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலா வந்தார். இந்த இடத்துக்கு கேரள மாநிலம், மூணாறு அருகே சூரியநல்லி வழியாக தான் ஜீப்பில் செல்ல முடியும். இதற்காக அவரும், அவருடைய நண்பர்கள் 11 பேரும் நேற்று முன்தினம் சூரியநல்லிக்கு வந்தனர். அங்கு பரத் தனது நண்பர்களுடன் தங்கினார்.

நேற்று அதிகாலையில் அவர் தனது நண்பர்களுடன் சூரியநல்லியில் இருந்து ஜீப்பில் கொழுக்குமலைக்கு சென்றார். காலை 6 மணியளவில் கொழுக்குமலையில் சிங்கப்பாறை என்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தி சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

மீட்பு பணி

அவர்களுடன் மேலும் சில சுற்றுலா பயணிகளும் சூரிய உதயத்தின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர். அப்போது பரத் தனது நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அங்குள்ள பள்ள மான பகுதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீரென பரத் அங்குள்ள சுமார் 400 அடி பள்ளத்தை நோக்கி பாய்ந்தார். அதை சற்றும் எதிர்பாராத அவருடைய நண்பர்களும், சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இதுகுறித்து கேரள மாநில போலீசாருக்கும். வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே கேரள வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த பரத் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணை

தற்கொலைக்கான காரணம் குறித்து பரத்தின் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, பரத் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, மாணவர் பரத் தற்கொலை செய்யும் முன்பு அங்கு வாலிபர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தனர். அந்த ரீல்ஸ் வீடியோவில், பரத் தற்கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.