தமிழக செய்திகள்

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

கல்லூரி மாணவர்

திருச்சி வேங்கூர் கீழமுருகூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் புஷ்பநாதன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் அர்னால்டு சஞ்சய்(வயது 17). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் கல்லூரியில் படிக்கும் நண்பரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு, நண்பர்களுடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார்.அங்குள்ள பூங்கா பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு, மாலை நேரத்தில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் ஆற்றில் குளித்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் 3 பேரும் நீரில் மூழ்கினார்கள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் வேகமாக ஓடிச்சென்று ஆற்றில் இறங்கி, தண்ணீரில் மூழ்கிய 2 பேரின் கைகளை பிடித்து மீட்டனர். ஆனால் அவர்களை மீட்பதற்குள் அர்னால்டு சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.

பிணமாக மீட்பு

இது பற்றி தகவல் அறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் அர்னால்டு சஞ்சய் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அர்னால்டு சஞ்சயை பிணமாக மீட்டனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT