திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
நெல்லையை சேர்ந்தவர் ராஜூ (வயது 21). இவர் மும்பையில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்தநிலையில் ராஜூக்கு, புதுவை மாநிலம் காரைக்கால் அரசு கல்லூரி ஒன்றில் படிக்கும் 17 வயது மாணவியுடன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தனக்கு திருமணமானதை மறைத்த ராஜூ, தனது வசீகர பேச்சால் மாணவியை காதல் வலையில் வீழ்த்தினார்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து ராஜூ, அடிக்கடி காரைக்கால் வந்து மாணவியை பார்த்து சென்றுள்ளார். நாளுக்கு நாள் நெருக்கம் அதிகமாகவே ராஜூ, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியிடம் பேசுவதை ராஜூ தவிர்த்து வந்தார். மேலும் ராஜூவுக்கு திருமணம் ஆன விஷயம் தெரியவரவே அந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
மிரட்டி பணம் பறிப்பு
இதுகுறித்து அந்த மாணவி, ராஜூவிடம் முறையிட்டார். அப்போது ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதை காரணம் காட்டி மாணவியிடம் பணமும் பறித்ததாக தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார், போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜூவை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். மும்பை டிராம்ப் பகுதியில் பதுங்கி இருந்த ராஜூவை, நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை காரைக்கால் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் ராஜூவை காரைக்கால் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
போலீசாருக்கு பாராட்டு
ராஜூவை விரைவாக பிடித்த போலீசாரை பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்மை காலமாக சமூக வலைத்தளங்கள், இன்ஸ்டாகிராம் மூலம் பாலியல் வழக்குகள் மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே சிறுவர், சிறுமியின் கைகளில் தேவையில்லாமல் செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்கவேண்டும். செல்போன்களை கையாளும்போது பெற்றோர் மேற்பார்வையில் இருக்க வேண்டும். போலீசார் சமூக வலைத்தளங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதுபோன்ற குற்ற சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.