தமிழக செய்திகள்

தமிழகத்தில் சீமான் எனும் காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் - மாணிக்கம் தாகூர்

குற்றங்களே இல்லாத சமூகத்தைப் பின்லாந்தில்தான் உருவாக்க முடியும் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

மதுரை,

அண்ணன் சீமானால் எந்தத் தேர்தலிலும் டெபாசிட் வாங்க முடியவில்லை.இந்த காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

டிரம்ப் தோற்றதற்கு இதான் காரணம்

"தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுவதும் விலைவாசி அதிகரித்துவிட்டது. அமெரிக்க இடைத்தேர்தலில் டிரம்ப் தோற்றதற்குக் காரணமே விலைவாசிதான். ஈரான் மீதான தாக்குதலாலும், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளாலும் 20% முதல் 30% வரை விலைவாசி அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டை விட்டு அடுத்த ஊர் சென்றாலும் இதே நிலைதான். ஆனால், தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பணப் பெட்டிகளுடன் ஊழல் சக்திகள்

"தவெகவிற்கு எதிராக ஊழல் சக்திகள் எல்லாம் இன்று சேர்ந்து பணப் பெட்டிகளுடன் அலைகிறார்கள். திமுகவினர்தான் இந்த ஆட்சி நிலைக்காது என்கிறார்கள். ஆனால், எவ்வளவு பணம் கொட்டினாலும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. மக்களுக்கு ஊழல் இல்லாத அரசு இருக்க வேண்டும்.

பின்லாந்தில்தான் உருவாக்க முடியும்

கடந்த வருடம் இதே நேரத்தில் ஒரு சம்பவம்கூட நடக்கவில்லை என்றால், இதைச் சட்டம் ஒழுங்கு சீர்கேடாகப் பார்க்க முடியும். எடப்பாடியார் ஆட்சியிலும் இந்த மாதத்தில் எத்தனை கொலைகள் நடைபெற்றன, திமுக ஆட்சியில் எத்தனை சம்பவங்கள் நடந்தன என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 30 மாவட்டங்களுக்கான தரவுகளை மாவட்ட எஸ்.பி.க்கள் வெளியிட வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் குறைந்துள்ளனவா, அதிகரித்துள்ளனவா எனப் பார்க்க முடியும். குற்றங்களே இல்லாத சமூகத்தைப் பின்லாந்தில்தான் உருவாக்க முடியும்.

அண்ணன் சீமானால் எந்தத் தேர்தலிலும் டெபாசிட் வாங்க முடியவில்லை.இந்த காமெடி சீரியல் ஓடிக்கொண்டேதான் இருக்கும் என்று கூறினார்.

SCROLL FOR NEXT