சென்னை,
ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை, ஓமந்தூரார் பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின், முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்த 2018 முதல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்ற செய்தி வெளிவந்துள்ளது.
ரத்த பகுப்பாய்வு, புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டறிவது உட்பட நூறுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இம்மருத்துவமனையில் செய்யப்படுவது வரவேற்பிற்குரியது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட தொய்வின்றி, அம்மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையம் சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் இந்த மருத்துவமனைக்கும், அம்மருத்துவமனையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது. இத்தகைய பரிசோதனை வசதிகளை அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளிலும் உருவாக்கிட வேண்டும்.
அரசு மருத்துவமனைகளின் பயனாளிகள் மிக பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் கட்டணமில்லா சேவையாக வழங்க அரசு முன் வர வேண்டும்.
சென்னை, ஓமந்தூரார் பல் நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணிநிரந்தரம் வழங்கிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.