சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த பிப்ரவரி 28-ம் தேதியன்று அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான பதற்ற நிலை தொடர்கிறது. இதனால், இந்தியாவின் எரிபொருள் சந்தை வரலாறு காணாத நெருக்கடிக்கு நெட்டித் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக, இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று (1.5.2026) முதல் வணிக எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) ஒன்றுக்கு தலா ரூ.993 உயர்த்தியுள்ளது. இதனால், வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3,237 ஆக உயர்ந்து, சிறு, குறு வணிகர்களின் கைகளுக்கு எட்டாப் பொருளாகிவிட்டது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள், தேநீர் உள்ளிட்ட பலகாரக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் செயலிழந்து வரும் துயரம் தீவிரமாகி வருகின்றது. இதன் விளைவாக கடுமையான விலை உயர்வுச் சுமை மக்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. தேநீர் தொடங்கி அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 20 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அத்துடன், சிலிண்டர் தேவைக்கு பெறுகிற நிலை தடுக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒரு முறையும், நகரப் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலனை பேணுவதாக வாயில் நுரை தள்ள பேசி வரும் பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும், மத்திய அரசும் அமெரிக்க அரசின் தலைவர் டிரம்ப் அனுமதி கேட்டு காத்துக் கிடப்பது வெட்கக்கேடானது. நாட்டின் பாரம்பரியம் மிக்க அணிசேரா அயலுறவுக் கொள்கைக்கு எதிரானது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் பெரும் குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக கலால் வரியை குறைத்துள்ளது. ஆனால் உள்நாட்டில் சாமானிய மக்களின் வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலாகும். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.