சென்னை,
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்காமல், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற முறையில், கோவில் பணிகளுக்கு புதிய டெண்டர் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து கோவில்களுக்கும் டெண்டர் விண்ணப்பங்களில் ஒரே மாதிரியான படிவங்கள் கொண்டு வந்து இருக்கிறோம். 40 நாட்களாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கொண்டு வந்து இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் நடக்க போகிறது. இனிமேல் அனைத்து கோவில்களுக்கும் பார்க்கிங், மொட்டை போடுதல், கடைகள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு பொதுவான டெண்டர் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆன்லைனில் டெண்டருக்கான ஒப்பந்த புள்ளி கோருவது நடக்கும். அதற்கான ஏலமும் ஆன்லைனில் நடக்கும்.
அனைத்து டெண்டர்களுக்கும் ஜிஎஸ்டி, பான், கட்டாயம். விலை பட்டியல் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். இதன் மூலம் சரியான விலைக்கு தான் விற்பனை செய்கிறார்களா என்று கண்காணிக்க முடியும். பார்க்கிங் பொறுத்தவரைக்கும் நிறைய இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. ஒரு கோவிலில் ரூ.100 வாங்குகிறார்கள்; ஒரு கோவிலில் ரூ.200 வாங்குகிறார்கள் என நிறைய புகார்கள் வருகின்றன. டிஜிட்டல் முறையில் பில்லிங் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான டெண்டர்களும் கொண்டு வந்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.