தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த கம்யூனிஸ்டு தலைவர்கள்... பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

வேலை உரிமைகள் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) ஆகிய இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று (01.07.2026) புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

அரசுக்கு நிதிச் சுமை

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் தொழிலாளர் நலனுக்கு எதிராக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நான்கு சட்ட தொகுப்புகளால் ஏற்படும் விளைவுகள், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பணிப்பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பணிப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் சந்தித்து வரும் துயரங்களுக்கு தீர்வு காண வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள விபி ஜி ராம்ஜி திட்டத்தால் மாநில அரசுக்கு அதிகரிக்கும் நிதிச் சுமை, தொழிலாளர்களின் சட்டப்பூர்வ வேலை உரிமைகள் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது

பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல், சிங்கப் பெண் சிறப்புப் படைக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதன் அவசியம், தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா மையங்களை மேம்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் எடுத்துக் கூறப்பட்டது.

மேகதாது அணை பிரச்சினை

காவிரி ஆற்றின் நதிநீர் பங்கீடு பிரச்சினையில் தற்போது மேகதாது அணை கட்டும் பிரச்சினை தீவிரமாகியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் “நடுவர் மன்றம்“ அமைக்க வேண்டும் என்ற திருத்தம் சேர்க்கப்பட்டதன் மூலம் பல்வேறு சந்தேக வினாக்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அரசு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி ஒருமித்த கருத்து உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொழிலாளர்கள், அவர்களது கோரிக்கைகளுக்காக போராடும் நேர்வுகளில் காவல்துறையின் அணுகுமுறை போராடும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

முதல்-அமைச்சர் உறுதி

இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்த கருத்துக்களை மிகக் கவனமுடன் உள்வாங்கிய முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் “கோரிக்கைகளுக்காக முந்தைய காலங்களில் போராடியதை இங்கு குறிப்பிட்டீர்கள், நமது ஆட்சியில் போராட்டங்கள் நடைபெறாத சூழல் ஏற்படும்” என உறுதியளித்தார். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை எனது கவனத்துக்கு தெரிவிக்க எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறி, இங்கு முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு) சார்பில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, என்.குணசேகரன் மற்றும் கே.கனகராஜ் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, மாநிலத் துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் ஆகியோரும் முதல்-அமைச்சர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.