சென்னை,
டில்லியில் காவல்துறை - துணை ராணுவப்படை அராஜகம்! இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கைது - முன்னணி ஊழியர்கள் மீது தாக்குதல்கள்! மாவட்ட தலைநகரங்களில் கண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்ததாவது:-
தலைநகர் டெல்லியில் காவல்துறை, துணை ராணுவப்படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா சுட்சி சார்பில் ஐந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்த பின்புலத்தில் கைது வேட்டையும், தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் ஆதாவை தெரிவித்து இருந்தன.
டெல்லிக்கான 254 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35000 காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்ற சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை கூட செவிமடுக்கப்படவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் கட்சி தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் டெல்லியில் கைதாகி உள்ளனர். இடதுசாரி வாலிபர். மாணவர், அமைப்புகளின் தலைவர்கள், முன்னணி ஊழியர்களும் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில மணி நேரங்களாக காவல் வாகனத்தில் வைத்து கொண்டே சற்றி வருகிறார்கள்.
ஜந்தர்மந்தர் பகுதியில் மத்திய அரசின் டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர். கட்சி, வெகுஜன அமைப்பு அலுவலகங்கள் துணை ராணுவ படையாலும், மத்திய அரசின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஜனநாயக மறுப்பின் உச்சகட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன.
இந்த அடக்குமுறை, கைதை கண்டித்தும், ஞானேஷ் குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.