சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் நாள் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் நடைபெற்ற மாநாட்டில் நிறுவப்பட்டது. இந்த மாநாட்டிற்கு, தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். அவரது உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது முதல் நாட்டின் பரிபூரண விடுதலைக்காகப் போராடியது. உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும், சாதிகளற்ற, வர்க்கங்களற்ற, சுரண்டலற்ற சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதற்காகவும், உலக சமாதானத்திற்காகவும் போராடி வருகிறது. மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்காகவும், பல்வேறு மொழி பேசும் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் உரிமைகளை பாதுகாக்க, வங்கிகளை நாட்டுடைமையாக்கிட, மன்னர் மானியத்தை ஒழித்திட, நிலப்பிரபுத்துவ - சாதிய கொடுமைளை ஒழித்திட வீரம் நிறைந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காகவும், இறையாண்மையை பாதுகாப்பதற்காகவும், உறுதியோடு போராடிவருகிறது. இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சட்டம், மாநில உரிமைகள், கூட்டாட்சி கோட்பாடு போன்றவற்றை பாதுகாப்பதற்காக போராடி வருகிறது. அளப்பரிய தியாகங்களை செய்துள்ள, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஜனசக்தி வார இதழ் சார்பில் “ஜனசக்தி சிறப்பு மலர்” வெளியிடப்படுகிறது.
இம்மலரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, அது நடத்திய பல்வேறு வீரமிகுப் போராட்டங்கள், பல்வேறு துறைகளில் அதன் பங்களிப்பு போன்றவை குறித்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. வரலாற்றுப் பெட்டகமாய் வெளிவரும் இம்மலரின் வெளியீட்டு விழா, நாளை (11.03.2026) புதன் கிழமை மாலை 4.00 மணிக்கு, சென்னை தியாகராயர் நகர், செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமையகமான “பாலன் இல்லத்தில்” நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்குகிறார். மாநில துணைச் செயலாளர் எம்.ரவி வரவேற்புரை நிகழ்த்துகிறார். மலர் தயாரிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் டி.எம்.மூர்த்தி, மலர் அறிமுக உரையாற்றுகிறார். திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் திரு.கி.வீரமணி மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் மலரை பெற்று சிறப்புரையாற்றுகிறார். மூத்த தொழிற்சங்க தலைவர் திரு.இரா. குசேலர் வாழ்த்துரை வழங்குகிறார். மாநில துணைச் செயலாளர் நா. பெரியசாமி நன்றியுரையாற்றுகிறார். இவ்விழாவில், ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் ரூ.300/- விலையுள்ள மலர் ரூ.250/- க்கு கிடைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.