தமிழக செய்திகள்

விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நடிகை திரிஷாவை அவமதித்து, நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

பாஜகவின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய், தேர்தல் அரசியல் குறித்த பேசியிருப்பதை சுட்டிக்காட்டி, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத முறையில் நடிகை திரிஷாவை அவமதித்து, இழிவுபடுத்தும் நோக்கில், பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆர் எஸ் எஸ் பெண்களை இழிவுபடுத்தி, அடிமைகளாக நடத்த வேண்டும் என்பது தான், இந்து தர்ம சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதாக போதித்து வருகிறது. அதன் அரசியல் பிரிவான பாஜகவும் பெண்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் நாடெங்கும் பரவலாக நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனின் வன்ம பேச்சும் அமைந்துள்ளது. பாஜகவிடம் அரசியல் வறட்சியும், வெறுப்பும் நிரம்பி வழிவதால், அவர்களிடம் ஆரோக்கிய அரசியலை எதிர்பார்க்க முடியாது. பெண்களை கண்ணியக் குறைவாக பேசும் பாஜகவுக்கும், அதன் தலைவர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் எதிர் வரும் தேர்தலில் பெண்கள் கடுமையான தண்டனை வழங்கி பாடம் கற்பிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.