சென்னை,
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகள் கடனை தமிழக அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடசென்னை மாவட்டம் சார்பில், வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ரா.முத்தரசன் தலைமை தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க வேண்டும். அதேபோல், த.வெ.க. அரசு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குறிப்பிட்ட அளவு மட்டுமே ரத்து செய்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அமோனியா வாயு கசிவால் 300-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட தனிக்குழுவின் அறிக்கையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டதொகுப்புகளை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதேபோல், மத்திய சென்னை மாவட்ட சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலும், தென் சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.