தமிழக செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

இப்போரினால் ஈரான் மற்றும் உலகப் பொருளாதார பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளன.

சென்னை,

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்திட வேண்டுமென வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச்செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின. இத்தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் அரசியல் பொருளாதார ராணுவ மேலாதிக்க நோக்கம் இதற்கு முக்கியக் காரணமாகும். எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், ஈரானில் தனது ஆதரவு பொம்மை அரசை உருவாக்கி அதன் மூலம் அந்நாட்டின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்கிற நோக்கில் அமெரிக்கா ஈரான் மீதான இத்தாக்குதலை நடத்திவருகிறது.

போர் பதற்றம்

ஈரான் நாடு, அணு ஆற்றல், அறிவியல் தொழில்நுட்பம், ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் மேற்காசியாவில் சுயச்சார்பும், வலிமையும் மிக்க நாடாக மாறிவிடக் கூடாது என்ற நோக்கிலும் இத்தாக்குதல்கள் அமெரிக்காவால் நடத்தப்பட்டுவருகின்றன. தற்காப்பிற்காக ஈரானும் பதிலடி தாக்குதல்களை நடத்திவருகிறது. மேற்காசியா முழுவதும் போர் பதற்றம் தொடர்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வளைகுடா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு பயந்து அச்சத்தோடு வாழ்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

பாகிஸ்தான் முன் முயற்சியில் ஏற்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தையும், தொடர்ச்சியான அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் அமெரிக்கா மீறிவிட்டது. இப்போரின் காரணமாக ஈரான், ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதன்காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய், எரிவாயு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகின் பல நாடுகளில் எரிபொருட்களின் தட்டுப்பாடும், விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இப்போரினால் ஈரான் மற்றும் உலகப் பொருளாதார பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளன.

கண்டன ஆர்ப்பாட்டம்

எனவே, ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக  அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும். மேற்காசியாவில் வாழும் இந்தியர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கவும், அவர்களை பத்திரமாக மீட்டு கொண்டுவரவும் உடனடி நவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்திட வேண்டும். போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அரசுகளுக்கு மத்திய பாஜக அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 10-ந் தேதி காலை 10:30 மணியளவில் சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகில் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் மு.வரதன் தலைமை  தாங்குகிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எஸ். கே. சிவா, வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம், தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உலக சமாதானத்தை விரும்பும்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT