தமிழக செய்திகள்

தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை

தொகுதி ஒதுக்கீடு குறித்து திமுகவினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுவிட்டன. தற்போது எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தொகுதிகளை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையில், திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிடோரும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக முத்தரசன், சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.