சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 75 ஆண்டு கால திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி அரசியல் களத்தின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆட்சிமையக்க முடியாமல் இருந்தது.
இதனை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி முதல் ஆளாக தவெகவுக்கு ஆதரவு அளித்தது. பின்னர் விசிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தங்களது ஆதரவை தவெகவுக்கு அளித்தன. இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக தாண்டியதைடுத்து தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மட்டும் விலகிய நிலையில், மற்ற கட்சிகளான விசிக, இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு எனவும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று உள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இடம்பெற இயலாது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.
இப்போது இருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இடம் பெற இயலாது. இதைவிட அழுத்தமாக சொல்ல முடியாது. கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது. கூட்டணி ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தற்போது இல்லை; தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவுதான்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும். அதில் எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழல் பொறுத்து முடிவு செய்யப்படும். வர்க்க நலன் சார்ந்து போட்டியிட முடியும்.
இரு மொழிக் கொள்கையில் முதல்-அமைச்சர் விஜய் உறுதியாக இருக்க வேண்டும்; மெட்ரோ திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.