தமிழக செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்றும் அழிவில்லை - பெ.சண்முகம் உறுதி

கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி இவ்விரு கட்சிகளும் த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. இதற்கிடையே, தமிழகத்தில் இடதுசாரி அரசியலை வலுப்படுத்தும் வகையில் 'இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு' என்ற குழுவை கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து உருவாக்கின. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தனித்து போட்டி

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்து களம் காண கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி, இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை களம் இறக்கின. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளராக லட்சுமணன், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேட்பாளராக சுகந்தி போட்டியிட்டனர்.

த.வெ.க. ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தாலும் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்தே கம்யூனிஸ்டு கட்சியினர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே கம்யூனிஸ்டு கட்சிகள் 5-வது இடத்திலேயே இருந்து வந்தன. மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் இடையே சிறிய அளவிலான ஓட்டு வித்தியாசம் மட்டுமே நிலவியது. ஆனால், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை விட நாம் தமிழர் கட்சி 4,111 வாக்குகள் முன்னிலையில் இருந்தது.

டெபாசிட் இழப்பு

முடிவில், தாராபுரத்தில் களம் கண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் 1,157 வாக்குகளும், மதுராந்தகம் தொகுதியில் களம் கண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் 1,986 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 3,143 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. வாக்கு சதவீதம் அடிப்படையில் தாராபுரத்தில் 0.64 சதவீதமும், மதுராந்தகத்தில் 1.07 சதவீதம் பெற்றுள்ளன. இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு தொடங்கிய பின்னர் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிட்ட முதல் சட்டமன்ற இடைத்தேர்தலிலேயே டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல் தோல்வி கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்றும் அழிவில்லை

இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம். கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT