தமிழக செய்திகள்

வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்: 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமா..?

தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் 5 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் சேர்த்து 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்முறையாக வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் பொருத்தப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடி அதிகாரியிடம் காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் மற்றும் 300 கம்பெனி துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழக தேர்தல் பணிகளை கண்காணிக்க 136 பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும்நிலையில், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 6,234 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 23ம் தேதி பிற்பகல் வரைக்கும் மொத்தமாக 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் மக்கள் நள்ளிரவில் கடும் அவதியடைந்ததாக கூறப்படுகிறது.

பேருந்துகள் கிடைக்காததால் நள்ளிரவிலேயே மக்கள் பேருந்து நிலையத்திலேயே அமர்ந்து போராடும் சம்பவமும் நிகழ்ந்தது. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

பேருந்து கிடைத்து பயணத்தை தொடங்கியவர்களும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். அவர்கள் தாம்பரத்தை தாண்டவே பல மணி நேரங்கள் பிடித்திருக்கிறது. இரவு பேருந்து ஏறி காலையில் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கலாம் என திட்டமிட்டிருந்த பயணிகளும் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு சென்னையிலிருந்து கிளம்பியவர்கள் காலை வரைக்குமே திண்டிவனம், விழுப்புரம் வரைக்கும்தான் சென்றிருக்கின்றனர். இதனால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற ஊர்களை சேர்ந்த பயணிகள் வாக்குப்பதிவு முடிவதற்குள்ளாவது ஊருக்கு சென்று சேருவோமா.. இல்லையா..? என சமூகவலைதளங்களில் கவலையோடு பதிவிட்டு வருகின்றனர்.

100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து வரும் நிலையில், வாக்கு செலுத்த ஊருக்கு செல்ல முடியாமல் பயணிகள் பலர் தவித்து வரும் சூழல் நிலவி வருகிறது.