சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்தத் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்தப்பட வேண்டும். மேலும், முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 48 துறைகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வை 42,064 பேர் எழுதினர். கடந்த பிப்ரவரியில் 5 பாடப்பிரிவுகளுக்கான முடிவுகள் மட்டும் வெளியாகின. மீதமுள்ள 56 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கல்லூரி விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு மொத்தம் இரு தாள்களையும், மூன்று பிரிவுகளையும் கொண்டதாகும். முதல் தாளில் ஏ மற்றும் பி என இரு பகுதிகள் உள்ளன. அதில் முதல் பகுதி தேர்வர்களின் தமிழ் மொழித் திறனுக்கானது. 50 மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 20 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி. இந்தப் பகுதியில் பெறப்படும் மதிப்பெண்கள் தரவரிசையைத் தீர்மானிப்பதில் கணக்கில் கொள்ளப்படாது.
முதல் தாளின் பி பிரிவில் தேர்வர்களின் விருப்பப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். இரண்டாவது தாளில் 5 தலைப்புகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கட்டுரை எழுத வேண்டும். அதற்கு 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வில் வெற்றி பெற பொதுப் பிரிவினர் 40% மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 35% மதிப்பெண்களும் பெற வேண்டும். தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முடிவுகள் மற்றும் தரவரிசைப் பட்டியலில், முதல் தாளின் பி பிரிவில் 111 மதிப்பெண்கள் (74%) பெற்ற பலருக்கு இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை.
இரண்டாம் தாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, தமிழ்நாடு வரலாறு, தமிழ்நாடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவு ஆகிய பாடங்களிலிருந்து 5 வினாக்கள் கேட்கப்படும். விருப்பப் பாடத்தில் 111 மதிப்பெண் பெற்ற ஒருவருக்கு எழுதிய கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. தலைப்புக்கு பொருத்தமான ஒரு இரு தகவல்களை எழுதினால்கூட குறைந்தபட்சம் 5 அல்லது 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் பெற்ற ஒருவர், பூஜ்யம் மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு எதுவும் தெரியாதவராக இருப்பது சாத்தியமே இல்லை.
மேலும், முதல் தாளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் பூஜ்யம் மதிப்பெண்களும், முதல் தாளில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு இரண்டாம் தாளில் அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது எப்படி என்பது விளங்கவில்லை. இது திட்டமிட்ட முறைகேடாகவே தோன்றுகிறது.
தமிழக அரசு உடனடியாக இந்தத் தேர்வை முழுமையாக ரத்து செய்து, மறு தேர்வு நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும். மேலும், முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.