தமிழக செய்திகள்

புகார் பெட்டி

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்வாய் தூர்வாரப்படுமா?

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வடகரை பஞ்சாயத்து பாண்டியன் நகர் தெருவில் உள்ள சாக்கடை வாருகாலை தூர்வாரி பல நாட்களாகிறது. இதனால் தேங்கிய கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசி அப்பகுதியின் சுகாதாரத்தை கேடுக்கிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த கால்வாயானது நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள சாக்கடை வாருகாலை தூர்வார வேண்டும்.

பொதுமக்கள், வடகரை, மதுரை.

சேதமான பொது கழிப்பறைகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு கிராமத்தில் பொது கழிவறைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. தண்ணீர் சரியாக வருவதில்லை. மழை பெய்தால் நீரானது கட்டிடத்தின் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்த கழிப்பறைகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

கரிகாலன், அலங்காநல்லூர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் தெற்கு மாரட்வீதி சாலையோரம் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த சாலையில் செல்வதால் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்தப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசோக்குமார், தெற்கு மாரட் வீதி.

எரியாத தெரு விளக்குகள்

மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே 90-வது வார்டு வைத்தீஸ்வரன் தெருவில் மின்விளக்குகள் கடந்த சிலநாட்களாக எரிவதில்லை. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் இப்பகுதி பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் சாலை எதிர்புறம் வரும் வாகனங்களை காண முடியாமல் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே இந்த தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

ரவீந்திராந், வில்லாபுரம்.

விபத்து அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் நடைபாதையில் மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பாதாசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டு சாலை நடுவே செல்கிறார்கள். இதனால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயரூபன், சோழவந்தான்.

சிக்னல்கள் அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு, துவரிமான், கோச்சடை வழியாக பெரியார் பஸ் நிலையத்திற்கும் ஆரப்பாளயம் பஸ் நிலையத்திற்கும் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மேலக்கால் மெயின் ரோட்டில் டோக் நகர் சந்திப்பில் வேகத்தடை அமைக்கப்பட்டும் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெறுகின்றன. எனவே கோச்சடை முத்தையா கோவில் வரையிலும், பென்னர் வரையிலும் இருபுறமும் சிக்னல் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோச்சடை, மதுரை