சென்னை,
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாள் அன்று, சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் பதற்றம் நிலவியது. அப்போது த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் தி.மு.க.வின் சேகர் பாபு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குச்சாவடிக்கு வெளியே நிலவிய இந்த மோதல் சூழலில், இரு தரப்பினரும் நேரடியாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமானது.
தவெக வேட்பாளரை அச்சுறுத்தும் வகையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலும் சேகர் பாபு தரப்பினர் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வன்முறை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாகத் த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் தரப்பில் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாள் அன்று துறைமுகம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சினோரா அசோக் உள்ளிட்டோரை தாக்கியதாக அவர் அளித்த புகாரில், தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர் பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சட்டவிரோதமாகக் கூடுதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 முக்கிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.