தமிழக செய்திகள்

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: கைதான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற காவல்

போலீஸ் இன்ஸ்பெக்டர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர்,

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஏ டு இசட் மருத்துவமனை

தஞ்சையில் வல்லம் நம்பர் 1 சாலையில் ஏ டு இசட் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பங்குதாரர்களிடையே உரிமை பிரச்சினை நிலவியது. இது தொடர்பாக இரு தரப்பினரும் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திலும், மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திலும் புகார் செய்தனர். இந்த நிலையில் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர் ஆர்.எம். பாஸ்கரன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த பிரச்சினையில் உள்நோக்கத்துடன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எங்களை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் போலீசார் செயல்பட்டு வருவதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சரவணன் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

இதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், பங்குதாரர்கள் இடையேயான பிரச்சினையில் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும், மேலும் மிரட்டி ரூ.5 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாகவும் சரவணன் கூறினார். இதன் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றக் காவல்

அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், மருத்துவமனைக்கு நேற்று மதியம் சென்ற குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரித்து இன்ஸ்பெக்டர் சுகுமாறனை வருகிற 23-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். எனவே, சுகுமாறன் தொடர்ந்து மருத்துவமனையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

SCROLL FOR NEXT