திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் பாலாமடை பகுதியில் கிரஷர், எம்.சாண்ட் மணல் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் 2 பேர் அந்த நிறுவனத்திற்கு சென்று, வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தரராஜன் நெல்லை மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமாரிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரில், தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் கிரஷருக்கு வந்து எம்.சாண்ட் மணல் இலவசமாக தரவேண்டும் என்று கேட்டனர். ஆனால் நான் மணல் கொடுக்க மறுத்ததால் என்னை மிரட்டிவிட்டு சென்றனர்' என்று அவர் கூறி இருந்தார்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் உள்பட மேற்சொன்ன 2 பேரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசன்னகுமார் அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.
வீடு கட்டுவதற்கு இலவசமாக மணல் கேட்டதாக வந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.