தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகார்: மேலும் 4 பேர் கைது

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது.

சென்னை,

தவெக கூட்டணி ஆட்சி

சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

ரூ.35 கோடி பேரம்

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இதில் பின்புலமாக செயல்பட்டது தெரியவந்தது.

கைதான நரேசை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னையில் வைத்து நேரடியாக சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கைது

இந்த நிலையில், தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய புகாரில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரமேஷ், சீனிவாசன், செல்வம் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.