Image Credits: @tnhrcedept 
தமிழக செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முற்றிலும் தடை

அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே, திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

கடவுள் முருகரின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல முழு தடை விதிக்கப்படுவதாகவும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலினுள், பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில். கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைபேசி (Mobile Phone) பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேற்படி நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வரும் ஜூலை 1 முதல் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையானது. மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன் பொருட்டு, திருக்கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை. ரூ.100/- விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே, திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவே. பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் போது தங்களது கைபேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ. பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பக்தர்கள், தமது கைபேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counter) நிறுவப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பக்தர்கள் தங்கள் கைபேசிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றைப் பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.