தர்மபுரி,
நண்பரின் மனைவியை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த பூசாரியை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில் சமரசம் செய்ய சென்றவருக்கு வந்த சபலத்தால் தற்போது கைதாகி உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அந்த இளம்பெண் அப்பகுதியில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் படித்து வந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்கும் சென்று வந்தார். அவருடைய கணவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவரின் நண்பரான கோவில் பூசாரி ரகுராம் (28 வயது) இவர்களை சமாதானம் செய்துள்ளார். அதன்பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை ரகுராம் காரில் வருமாறு அழைத்துள்ளார்.
காரில் சென்றபோது இருவரும் நெருக்கமாக இருப்பது போல் படத்தை செல்போனில் எடுத்து வைத்துக்கொண்ட ரகுராம், நமக்கு தகாத உறவு இருப்பதாக வெளியே சொல்லி விடுவேன் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு வருமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்துபோன இளம்பெண் அதற்கு உடன்பட்டுள்ளார். இவர்கள் தனிமையில் இருந்தபோது செல்போனில் மறைமுகமாக படம் பிடித்த ரகுராம் அந்த வீடியோ காட்சிகளை சென்னையில் உள்ள தனது நண்பருக்கு அனுப்பினார். அந்த நண்பரும் இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றபடி பேச வேண்டும் என மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அவர் கூறியதை போலவே வீடியோ காலில் பேசினார். அதை பதிவு செய்து வைத்துக்கொண்ட அந்த வாலிபர் இளம்பெண்ணை பாலியல் இச்சைக்கு அழைத்தார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோ பதிவுகளை இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக கூறி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இது தொடர்பாக அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரி ரகுராமை நேற்று கைது செய்தனர். தலைமறைவான சென்னையைச் சேர்ந்த வாலிபரை தேடி வருகின்றனர்.