தமிழக செய்திகள்

புரட்டாசி மாதம் நிறைவு: இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை அமோகம்!

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சேலம்,

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதம் இருப்பார்கள். மேலும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வீடுகளில் பெருமாளுக்கு படையலிட்டு பூஜை செய்வது வழக்கம்.

ஐப்பசி மாதம் பிறப்பு

இந்த நிலையில், புரட்டாசி மாதம் நிறைவடைந்து நேற்று ஐப்பசி மாதம் பிறந்தது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சேலம் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இறைச்சி கடைகளில் விற்பனை அதிகரிப்பு

சேலம் அஸ்தம்பட்டி, பழைய பஸ் நிலையம், சூரமங்கலம், குகை, அன்னதானப்பட்டி, அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட வியாபாரம் அதிகமாக நடைபெற்றது.

ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800 முதல் ரூ.900 வரையிலும், நாட்டுக்கோழி கிலோ ரூ.700-க்கும், பிராய்லர் கோழி கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம்

இதேபோல், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மீன் வகைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

அஸ்தம்பட்டி, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீன் கடைகளிலும் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. லோகு, கட்லா, மத்தி, ஊளி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT