சென்னை,
தி.மு.க இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
* நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீதும், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
* 2026 சட்டமன்றத் தேர்தலில், கொள்கை உறுதியோடு மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை’ உருவாக்கி, தேர்தல் களத்தில் நம்மையெல்லாம் வழிநடத்தி, முதன்மை தொண்டராய் ஓய்வில்லாமல் உழைத்து, 73 சட்டமன்றத் தொகுதிகளில் நம் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
* தேர்தல் களத்தில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கழக நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் - பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய இணையதளம் ஒன்றை துவக்கியதோடு, தொகுதிதோறும் சென்று நேரடியாக அனைவரையும் சந்திக்கவும் ஆய்வுக்குழுவை நியமித்திருக்கிறார்
நம் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது இந்த முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இடும் கட்டளைகளை - பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.
* கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் தி.மு.க. தொண்டர்கள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது.
நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.
தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
* பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த தி.மு.க. அரசு மீது விஷமப் பிரசாரங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து, சேற்றை வாரி வீசியவர்கள் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. கோவையில் 10 வயது சிறுமி கடத்தி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். வந்தவாசியில், ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
படப்பை அருகே இரட்டைக் கொலை. தூத்துக்குடியில் மது தகராறில் கொலை. சேலத்தில் மாணவர் அடித்துக் கொலை. மணலி புதுநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வெட்டி படுகொலை. விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை எனக் குற்றப் பட்டியல் நீள்கிறது.
பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன.
ஆனால், முதல்-அமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், பேட்டரி காரில் பவனி வந்தார் என்ற ரீல்ஸ்களால் இவற்றைத் திசை திருப்ப பார்க்கிறார்கள்.
இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக முதல்-அமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் வலியுறுத்துகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.