தமிழக செய்திகள்

விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

முதல் அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந் தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20ம் தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

நிபந்தனை ஜாமீன்

இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.

மார்க்கண்டேயன் பேசியது என்ன?

மார்க்கண்டேயன் பேசியது என்ன? மானங்கெட்ட தமிழ்நாட்டினுடைய முதல் அமைச்சர்.. உன்னைய சட்டமன்றத்திற்குள் வைத்து பார்த்துகுறோம்.. நாங்க என்ன கோமாளி பயல்கள்னு நினைக்கிறீங்களா.. சட்டமன்றத்தை பூட்டுவாராம்.. பூட்டினால் எலும்பு இருக்காது உடைத்துவிட்டுதான் உன்னை அனுப்பி விடுவோம். இவ்வளவு ஒரு கேவலமான ஒரு முதல்வரை தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய வரலாறே பெற்றது இல்லை. என மார்க்கண்டேயன் பேசியிருந்தார்.