தமிழக செய்திகள்

தென்மாநில முதல்வர்கள் மாநாடு: 8 கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? - வேல்முருகன்

தமிழகத்தின் மாநில உரிமைகள் இம்மாநாட்டில் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழகத்தின் உரிமைகளுக்குத் தீர்வு கிடைக்குமா? எட்டு கோடித் தமிழர்களின் குரல் ஒலிக்குமா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

முதல்வர்கள் மாநாடு

மாமல்லபுரத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளை, பேசும் கூட்டமாக மட்டும் இருக்கக் கூடாது.

காவிரி நீர் உரிமை முதல் கல்வி உரிமை வரை, தமிழகத்தின் அடிப்படை மாநில உரிமைகள் அனைத்தும் இம்மாநாட்டில் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும்.

காவிரி நீரைத் தமிழகத்திற்கு உரிய அளவில் உறுதி செய்வதுடன், கர்நாடகத்தின் மேகதாது அணை முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநிலங்களின் கல்வித் தேவைகளையும், மாணவர்களின் சமூகச் சூழலையும் புரிந்துகொள்ளாத வகையில் மத்திய அரசால் திணிக்கப்படும் ஒரே மாதிரியான தேர்வு முறைகள், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கக் கூடாது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்

தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வரும் நீட் தேர்வை ரத்து செய்து, மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

நீர், கல்வி, வேலைவாய்ப்பு, மொழி, நிதி என ஒவ்வொரு துறையிலும் மாநிலங்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்படும் நிலையில், கூட்டாட்சி என்ற வார்த்தை வெறும் அரசியல் அலங்காரமாக இருக்கக்கூடாது.

எனவே, இன்றைய தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழகத்தின் நீர்வள உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட அனைத்து மாநில உரிமைகளையும் உறுதியுடன் முன்வைத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நீட் தேர்வை ரத்து செய்யவும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், தகுந்த தரவுகளுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.