சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, தொடர்ச்சியான, நீண்ட கால பிரதமர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். கடந்த 2014 மே 26-ம் தேதி முதல் முறையாக பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, தொடர்ச்சியாக 4,399 நாட்களை இன்று நிறைவு செய்துள்ளார். இது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை.
இந்தியாவில் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, 1952 மே 13-ம் தேதி பிரதமராகப் பதவியேற்ற ஜவஹர்லால் நேரு, 1964 மே 27-ம் தேதி வரை 4,398 நாட்கள் பதவியில் இருந்தார். இதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த, மகாத்மா காந்தியின் பரிந்துரையால் பிரதமரான நேருவின் சாதனையை, சமூக, பொருளாதார ரீதியாக மிக மிகப் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த, எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத பிரதமர் நரேந்திர மோடி முறியடித்திருக்கிறார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு.
ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராகப் பொது வாழ்வில் நுழைந்த நரேந்திர மோடி, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் வீர தீரத்துடன் செயல்பட்டதால் அரசியல் களத்திற்கு வந்தவர். குஜராத் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர், தேசியச் செயலாளர், தேசியப் பொதுச் செயலாளர் என்று பாஜகவின் அமைப்புப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றி, பல்வேறு மாநிலங்களில் கட்சிக்கு வெற்றியைப் பரிசளித்தவர்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, கட்சி கொடுத்த பணியைத் திறம்படச் செய்தவருக்கு 2001 அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்-மந்திரி பதவி தேடி வந்தது. அன்று முதல் தொடர்ந்து அரசுத் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையை நரேந்திர மோடி படைத்துள்ளார். வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல்-மந்திரி, பிரதமர் பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், தனது திறமையால், உழைப்பால் மட்டுமே முதல்-மந்திரி, பிரதமர் போன்ற அரசுத் தலைவர் பதவியில் கால் நூற்றாண்டுகளை வெற்றிகரமாகக் கடப்பது உலகில் யாரும் நிகழ்த்தாத அரும் பெரும் சாதனை. அவருக்கு எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 12 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியிருக்கிறார். வரும் 2047 இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டில், உலகின் முதல் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றும் இலக்குடன் அவர் பயணித்துக் கொண்டிருக்கிறார். இனி வரும் தேர்தல்களிலும் வென்று, பிரதமர் பதவியில் கால் நூற்றாண்டுகளையும் கடந்து, நாட்டை உலகின் முதல் பொருளாதார நாடாக்கும் இலக்கில் வெற்றி பெறுவார்.
ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி சாதிக்கப் பிறந்தவர். மக்களின் துணையோடு சாதித்துக் கொண்டிருப்பவர். அவருக்கு நாம் அனைவரும் துணை நிற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.