சென்னை,
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்-அமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அச்சட்டம் கவர்னர் வழியாக குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வி துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான விஸ்வநாதன் கவர்னரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.
ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரே பல்கலை கழக வேந்தராக தொடரலாம் என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.
இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றி கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.