சென்னை,
சட்டப்பேரவை தேர்தல் குறித்து சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தினார். மாவட்ட காங். கமிட்டி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செல்வப்பெருந்தகை, காங். தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் கே.சி.வேணுகோபால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான, தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை. பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும்.
திமுக எங்கள் பழைய கூட்டாளி. அவர்களிடம் எங்கள் நிலைப்பாட்டை எடுத்து வைத்து பேசி முடிவு எடுக்கப்படும்.
நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான். எங்களுக்கும் அரசியல் லட்சியங்கள் உள்ளன. வகுப்புவாத சக்திகளை திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் எதிர்க்கும்.
கூட்டணி குறித்து கூறப்படும் கருத்துகள் அவர்களுடைய தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது. கூட்டணி தொடர்பான தனி நபர்களின் கருத்து காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு கிடையாது.
தவெகவுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு உங்கள் ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என வேணுகோபால் பதில் அளித்தார்.